Thursday, 12 January 2012

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!
 alt

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.

இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

"எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று தமிழிலும், 'லங்கா' என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் - சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது" என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

"ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.

0 comments: